இது நடந்தால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வது உறுதி: ஜெய் ஷா அதிரடி
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்ல இந்தியாவை தவிர்த்து, மற்ற அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்ல இந்தியாவை தவிர்த்து, மற்ற அணிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டுதான் இந்திய அணி, இறுதியாக பாகிஸ்தான் சென்று விளையாடியது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பையில் பங்கேற்றப் பிறகு, இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு சென்றபோதும் இந்தியா அங்கு செல்லாமல், தங்களுடைய போட்டிகளை, இலங்கையில் விளையாடியது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க இந்தியாவை தவிர்த்து, மற்ற 6 நாடுகளும் சம்மதம் தெரிவித்துவிட்டன. இந்தியாவின் முடிவுக்காக ஐசிசி காத்திருக்கிறது.
எனினும், இந்திய அணி நிச்சயம் பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது கோரிக்கை வைத்துள்ளது.
அத்துடன், இந்திய அணி வீரர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முழுப்பொறுப்பு எனத் தெரிவித்துள்ளது. ஆனாலும், இந்தியா இன்னமும் தங்களது தீர்மானத்தை அறிவிக்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தானுக்கு செல்லாமல் இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரக்கத்தில் விளையாடினால், அது பாகிஸ்தானின் வருமானத்தை பாதிக்கும்.
இதனால், இந்தியாவை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என பாகிஸ்தான் நிர்வாகம், ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ‘‘சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வது குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை. பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து, மத்திய அரசு உத்தரவு கொடுத்தால், நிச்சயம் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லும்’’ எனக் கூறியுள்ளார்.
அத்துடன், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆராய, இந்திய குழுவினர் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஒருவேளை இந்திய அணி, பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதற்கான நிதியையும், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்காக ஐசிசி விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.