இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை.. வெறும் 486 பந்துகளில் முடிந்த போட்டி!
இந்தப் போட்டியில் மொத்தமாக 1,031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது போட்டியானது, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த பந்துகளில் முடிவடைந்த போட்டியாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 1,031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 36.5 ஓவர்களில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனால் ஆஸ்திரேலியா அணி 3.2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. அடிலெய்டு மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 8 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில், அனைத்திலும் வென்று ஆஸ்திரேலியா சாதித்துள்ளது.
அதேபோல் இந்தப் போட்டியில் மற்றொரு முக்கியமான சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளிலேயே மிகவும் குறைந்த அளவிலான பந்துகளை வீசிய போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 1,031 பந்துகளை மட்டுமே பவுலர்கள் வீசியுள்ளனர்.
இதற்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் இணைந்து 1,135 பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது. அதேபோல் இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக 486 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 இன்னிங்ஸிலும் பேட்டிங் செய்த இந்த அளவிற்கு குறைவான பந்துகளை விளையாடி இருப்பது 4வது முறையாகும். அதேபோல் இந்திய அணி 19வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இன்னொரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த கேப்டன் என்ற மோசமான சாதனையையும் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.