2024 ஹாங்காங் சிக்ஸஸ்: இந்திய அணி அறிவிப்பு... கேப்டனாக ராபின் உத்தப்பா!

2017 ஆம் ஆண்டுடன் இந்த தொடர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது மீண்டும் நடைபெற உள்ளது. 

2024 ஹாங்காங் சிக்ஸஸ்: இந்திய அணி அறிவிப்பு... கேப்டனாக ராபின் உத்தப்பா!

2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் ராபின் உத்தப்பா தலைமையிலான ஏழு வீரர்கள் கொண்ட அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா பல ஆண்டுகளாக விளையாடி வருவதுடன், கடைசியாக 2012 ஆம் ஆண்டு பங்கேற்று இருந்த நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி மீண்டும் விளையாட உள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் இந்த தொடர் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்பு இப்போது மீண்டும் நடைபெற உள்ளது. 

இந்திய அணியும் இம்முறை பபங்கேற்க உள்ளதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில்,  முதல் போட்டியிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.  இந்தியா - பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளதுடன், இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்க உள்ளன. 

கடைசியாக 2005 ஆம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரை இந்திய அணி வென்று இருந்ததுடன், பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா ஐந்து முறை இந்த கோப்பையை வென்று உள்ளன.  சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், தோனி, அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான் வீரர்கள் இந்த தொடரில் விளையாடி உள்ள நிலையில், இம்முறை விளையாடவுள்ள இந்திய அணியில் ராபின் உத்தப்பா (கேப்டன்), மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி, கேதர் ஜாதவ் மற்றும் பாரத் சிப்லி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மிகச் சிறிய பவுண்டரி எல்லை என்பதால் அதிக அளவில் சிக்ஸ் அடிக்கப்படுவதுடன், ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்பதால் இந்த தொடருக்கு ஹாங்காங் சிக்ஸஸ் என பெயரிடப்பட்டு இருக்கிறது.  இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் ஐந்து ஓவர் பந்து வீசுவதுடன், ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் வீசப்படும். அதன்படி மொத்தம் 40 பந்துகள் வீசப்படும். 

ஒரு அணியில் இடம்பெறும் ஆறு வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர் தவிர மற்ற ஐந்து வீரர்களும் தலா ஒரு ஓவர் பந்து வீச வேண்டும். வைடு மற்றும் நோ பால் ஆகியவற்றுக்கு இரண்டு ரன்கள் அளிக்கப்படும். ஒரு அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்து விட்டால், ஆறாவது பேட்ஸ்மேன், அவுட் ஆகும் வரை விளையாடலாம் என்பதுடன், ஐந்தாவது பேட்ஸ்மேன் அவருக்கு ரன்னராக இருப்பார். 

அதாவது ஆட்டமிழந்த ஐந்தாவது பேட்ஸ்மேன் எதிர்முனையில் நின்று ரன் ஓடுவார். அனைத்து பந்துகளையும் ஆறாவது பேட்ஸ்மேன் சந்திக்கலாம் என்ற நிலையில், அவர் அவுட் ஆகும் வரை அல்லது ஐந்து ஓவர் முடியும் வரை ஆட்டம் தொடரும். அத்துடன், ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்களை எட்டிய பின் மைதானத்தை விட்டு வெளியேறுவதுடன், அதன் பின் வேறு பேட்ஸ்மேன் அவுட் ஆனாலோ, ரிட்டையர் ஆனாலோ முன்னதாக ரிட்டையர் ஆன பேட்ஸ்மேன் மீண்டும் களமிறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp