Sri Lanka 24 Hours Online Breaking News

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்

0

Irandam Ulaga Porin Kadaisi Gundu Movie review

கடற்கரையில் நடக்கையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று காலிடறினால் எந்தளவிற்கு அதிர்ச்சி ஏற்படும்? அதே குண்டை எந்த சம்பந்தமும் இல்லாத இன்னொருவன் தோளில் சுமக்கும் சூழல் ஏற்படுவது எந்தளவிற்கு அவலம் நிறைந்தது?

இன்னமும் சாதி சொல்லி, காதல் மறுத்து கொலைக்குத் துணிவது எந்தளவிற்கு கீழ்த்தரமானது – இப்படி இரண்டாம் உலகப் போர் முதல் ஆணவக் கொலை வரை அடக்குமுறை வெடிக்கும் பல புள்ளிகளையே திரைக்கதையின் கண்ணிகளாக்கி இன்றைக்கான ‘அவசியம்’ பேசியிருக்கும் திரைப்படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’.

காய்லாங் கடையில் வேலை செய்யும் செல்வம், உரிமையின் அவசியம் உணர்ந்தவன். அவனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சித்ராவும் காதலிக்கிறார்கள். இடையில் சாதிதான் குறுக்கே நிற்கிறது என்று பார்த்தால், சம்பந்தமே இல்லாமல் செல்வத்திடம் வந்து சேரும் வெடிகுண்டு பெரும் சிக்கலாய் மாறுகிறது.

ஒருபுறம் அந்த வெடிகுண்டுக்காய் கார்ப்பரேட் வில்லன்களும், காவல் துறையும் துரத்திக் கொண்டிருக்க மறுபுறம் ஆணவக் கொலை முயற்சியிலிருந்து தப்பிய சித்ராவை காப்பாற்ற வேண்டிய சூழலும் செல்வத்துக்கு ஏற்படுகிறது.

இவற்றை வெகு நேர்த்தியாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. அந்த குண்டு வெடித்துவிடுமோ? எனும் பதட்டத்தை காட்சிக்குக் காட்சி வைத்து அறிமுக இயக்குநராக தன் கடமையை சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுகள்.

செல்வமாக ‘அட்டகத்தி’ தினேஷ். காய்லாங் கடை டிரைவராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதும் சக ஊழியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் துணிச்சல்காரன்.

ஒடுக்கப்பட்ட சமூகத்து இளைஞனாக அவர்களின் வலியை திரையில் பதிவு செய்திருக்கிறார். மது அருந்திவிட்டு தன் முதலாளியோடு மல்லுக்கு நிற்கும்போதும், ஆனந்தியிடம் காதலில் மருகும் போதும் ‘அட!’ போட வைத்திருக்கிறார்.

தோளில் வெடிகுண்டை சுமந்து செல்லும் காட்சி பார்வையாளர்களுக்கும் பகீர் என்றிருப்பது அவர் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பு.

நாயகி சித்ராவாக கயல் ஆனந்தி. குறும்புச் சிரிப்போடு படம் முழுக்க ரசிக்க வைக்கிறார். முனிஸ் காந்த் பதட்டம் நிறைந்த காட்சிகளில் கூட சிரிக்க வைக்கிறார். அவரே தன் நிஜப் பெயரை சொல்லும்போது தன் முதலாளிக்கு தெரியாமல் இருக்கும் காட்சியில் நெகிழ்ச்சியைக் கடத்தவும் தவறவில்லை.

போராளிப் பெண்ணாக வரும் ரித்விகா, காய்லாங் கடை முதலாளியாக சுரண்டலின் உச்சத்தைக் காட்டும் மாரிமுத்து, வில்லன் பொலிஸாக வரும் லிஜீஷ் ஆகியோரும் அந்தந்தக் கதபாத்திரங்களுக்கு கச்சித பொருத்தம்.

டென்மாவின் இசை பின்னணி இசையில் பெரும் பலமாக இருக்கிறது. சென்னை, பாண்டி, நாகை என பயணிக்கும் கதையில் அந்தந்த மண்ணுக்கான இசைக் குறிப்புகளையும் கலந்து பாடல்களாக்கிய விதம் நுட்பமானது.

காய்லாங் கடையை அச்சு அசலாக வடிவமைத்திருக்கும் ராமலிங்கம், அந்த வெடிகுண்டையும் பயமுறுத்தும் வகையில் வடிவமைத்து அசத்தியிருக்கிறார். அதனை தத்ரூபமாக ஒளியோடு படமாக்கி அந்தக் கதையோட்டத்தை மனவோட்டத்தோடு கலக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்.

பரியேறும் பெருமாளைத் தொடர்ந்து இன்னுமொரு நல்ல படைப்பை வழங்கிய தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

சாதியம், அணுகுண்டுவால் ஏற்படும் அழிவு, கார்ப்பரேட் அரசியல், காவல்துறையின் அதிகாரம் என பலவற்றை பதிவு செய்யும் திரைப்படத்தில் “மனுஷன்னா ஒருத்தர் வலிய இன்னொருத்தர் உணரனும்”, “எவ்வளவு நாளைக்குத்தான் நாமளே அடிச்சிக்குறது, இப்போ இன்னொருத்தன் நம்மள அழிக்க வந்திருக்கான்”, “எந்த சண்டைக்கும் ஆயுதம் தீர்வாகாது” என வசனங்கள் அவ்வளவு கூர்மை.

ஜப்பான் குழந்தையின் கதை மனித இனம் செய்த தவறுகளின் வடுக்களில் ஊசி இறக்குகிறது.

வெடிகுண்டு வெடித்து விடுமோ என பார்வையாளர்கள் பதட்டத்தில் இருக்கும்போது நீண்டு கொண்டே இருக்கும் காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதல் பாதியில் சில காட்சிகளையும், வசனங்களையும் இன்னும் குறைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இந்த சிறு குறைகளை எல்லாம் நீக்கியிருந்தால் இன்னும் வலிமையாகவும், சத்தமாகவும் அணு ஆயுதங்களும், சாதி, வர்க்க வேற்றுமைகளும் அறவே கூடாது என இன்னுமின்னும் சத்தமாக வெடித்திருக்கும் இந்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’.

மனைவியை கொன்ற கணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like