இருவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாது.. ரிஷப் பண்ட் குறித்து கம்பீர் அதிரடி பேச்சு! நீடிக்கும் சிக்கல்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிய ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் தான் இருப்பார் என இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பிடிப்பதில் சிக்கல் நீடிக்கின்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிய ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட ரிஷப் பந்த் களமிறங்கவில்லை.
ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கே.எல். ராகுல் சற்று தடுமாறிய போதிலும், ஐந்தாவது வரிசையில் சிறப்பாக விளையாடி வருகிறார் அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.
போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், கே.எல். ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என்றும், ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், தற்போது கே.எல் தான் சிறப்பாக செயல்படுகிறார் என்பதால், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், புள்ளிவிவரங்களையும் சராசரிகளையும் மட்டும் பார்த்து வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்றும், யார் சிறப்பாக செயல்படுவார்கள் என அணி நினைக்கிறதோ அவர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அணியில் கூடுதல் பந்துவீச்சு தேவை என்பதற்காகவே யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதாகவும், ஜெய்ஸ்வாலுக்கு நீண்ட எதிர்காலம் இருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் கம்பீர் கூறினார்.
எனினும், 15 பேர் கொண்ட அணியில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க இயலாது என்றும் கம்பீர் சுட்டிக்காட்டி உள்ளார்.