திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டகலை மேல்பில்ட் தோட்ட பகுதியில் லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மண்மேடு ஒன்றும் பாரிய கற்கள் இரண்டு சரிந்துள்ளன.

இதன்போது, சமையல் அறையில் இருந்த இருவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் பொதுமக்களின் உதவியோடு இரண்டு பேரும் காப்பாற்றபட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள, பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (12) மதியம் 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இதேவேளை, கற்கள் சரிந்து விழுந்த பகுதிக்கு சென்ற கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் கற்களை அகற்ற பெக்கோ இயந்திரத்தினை வரவழைக்க நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

காயங்களுக்கு உள்ளானவர்கள் 17 வயது சிறுமியும் 54 வயதுடைய வயோதிப பெண்ணுமே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா ஒற்றி தோட்ட பகுதியில் முதலாம் இலக்க லயன் குடியிருப்பின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் 2 குடியிருப்புகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதோடு, குடியிருப்புகளை சேர்ந்த 10 பேர் உறவினர்களின் வீட்டில் தங்க வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.