ஊடக அறம், உண்மையின் நிறம்!

5 ஆண்டாக பாலியல் தொல்லை- வியாபாரியை கத்தியால் குத்தி கொன்ற பட்டதாரி பெண்

புதுவண்ணாரப்பேட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததால் வியாபாரியை கத்தியால் குத்தி கொன்றதாக கைதான பட்டதாரி இளம்பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கற்பூர வியாபாரியான இவர் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார். நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் கற்பூர வியாபாரத்துக்காக வெளியில் சென்றார்.

இரவு 10 மணியளவில் புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு மைதானம் அருகில் ஏ.ஏ.ஸ்கீம் சாலையில் அவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புதுவண்ணாரப்பேட்டை பொலிஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்த போது பெண் ஒருவர் அம்மன் சேகரிடம் பேசிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் அம்மன்சேகரின் கழுத்தில் அருகில் இருந்து நிதானமாக வெட்டியது போன்ற காயமே இருந்தது.

இதை வைத்து அவருக்கு தெரிந்த நபர்களே இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் கருதினர்.

இதையடுத்து அம்மன் சேகரை கொலை செய்த நபரை பிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரே கொலை செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உடனடியாக அப்பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து சென்றனர். பி.காம். முடித்துள்ள அவரை பிடித்து விசாரித்தனர்.

அம்மன் சேகர் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே அவரை கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை அந்த பெண் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன பொலிஸார் அதுபற்றிய அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதுபற்றிய விவரம் வருமாறு:- வியாபாரி அம்மன் சேகரை கொலை செய்த இளம்பெண் திருவொற்றியூரில் உள்ள ஒரு கல்லூரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பி.காம். பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அம்மன் சேகரின் மகளும், இளம்பெண்ணும் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது அடிக்கடி இளம்பெண் அம்மன்சேகரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போதுதான் அம்மன்சேகர் இளம்பெண்ணிடம் பழகி அவரை ஏமாற்றி இருக்கிறார்.

அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளாக மகளின் தோழி என்றுகூட பார்க்காமல் அம்மன் சேகர் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

உனக்கு தெரியாமல் அலைபேசியில் ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் அம்மன் சேகர் மிரட்டி இருக்கிறார்.

இதனால் திருமண வயதை எட்டிய நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இளம்பெண் தவித்துள்ளார்.

அம்மன் சேகரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இன்று அம்மன் சேகருக்கு பிறந்த நாளாகும். 59 வயது முடிந்து 60 வயது பிறக்கிறது.

இந்த வயதிலும் தன்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறாரே? என்று வேதனை அடைந்த இளம்பெண் பிறந்தநாள் பரிசு தருவதாக கூறி நேரில் அவரை அழைத்துள்ளார்.

இதையடுத்து அம்மன் சேகர் நேற்று மாலையில் இளம்பெண்ணை சந்தித்தார். இருவரும் மோட்டார் சைக்கிளில் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அம்மன் சேகரை கொலை செய்ய கத்தியுடன் தயாராகவே இளம்பெண் வந்திருந்தார். அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தார்.

புதுவண்ணாரப்பேட்டையில் கொலை நடந்த இடம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை நிறுத்துங்கள். சர்ப்ரைஸ் தருகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அம்மன் சேகர் கீழே இறங்கியதும் கண்ணை மூடச் சொல்லியுள்ளார்.

அவர் கண்ணை மூடியதும் தான் வைத்திருந்த பசையை கண்ணில் பீய்ச்சி அடித்தார். பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அம்மன் சேகர் பலியானார்.

கழுத்தில் வெட்டு பட்டதும் அம்மன் சேகர் உயிர் பிழைப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றார். ஆனால் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயங்கி விழுந்தார். இதன்பிறகே உயிர் பிரிந்துள்ளது.

கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தோடியதில் அவர் அணிந்திருந்த சட்டை சிவப்பு கலராக மாறியது.

இந்த கொலை சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மன் சேகரை கொலை செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.