16 வருட ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்.. ஆனாலும் ஒரு சோகம்
முன்னதாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.
முன்னதாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார்.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் மீண்டு, உலகக்கோப்பையில் பங்கேற்பாரா? என்பதே கேள்விக் குறியாக இருந்தது. பின் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆடினார். ஆனால், அப்போது அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அதனால், மீண்டும் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். பின் நியூசிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாடி வரும் நிலையில் அவர் அணிக்கு திரும்பினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரர் கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரச்சின் ரவீந்திரா உடன் இணைந்து 180 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார் கேன் வில்லியம்சன். ஆனால், 95 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடிக்கும் வாய்ப்பை 5 ரன்களில் தவறவிட்டார்.
இந்தப் போட்டியில் 95 ரன்கள் எடுத்ததன் மூலம் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
முன்னதாக நியூசிலாந்து அணிக்காக உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் இடம் பெற்று இருந்தார். அவர் 33 இன்னிங்க்ஸில் 1075 ரன்கள் அடித்து இருந்தார்.
அதை முறியடித்த கேன் வில்லியம்சன் 24 இன்னிங்க்ஸில் அவரை முந்தி நியூசிலாந்து அணி அளவில் சாதனை படைத்தார். தற்போது பிளெம்மிங் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ராஸ் டெய்லர் 1002 ரன்கள், மார்டின் கப்டில் 995 ரன்கள், ஸ்காட் ஸ்டைரிஸ் 909 ரன்கள் எடுத்து இடம் பெற்றுள்ளனர்.