வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்... ரயில்-விமான நிலையங்கள் மூடப்பட்டன 

மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்... ரயில்-விமான நிலையங்கள் மூடப்பட்டன 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்நகரமே முடங்கி போய்விட்டது. 

மழையால் சாலைகளில் வெள்ளம் ஆறு போல ஓடியது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலைய சுரங்க பாதைகளை வெள்ளம் சூழ்ந்தது.

நியூயார்க் நகரை பொறுத்தவரை ரெயில் போக்குவரத்து மிக முக்கியமாக உள்ளது. சுமார் 420 ரயில் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள், ஊழியர்கள் ரயில் போக்குவரத்தை தான் முழுமையாக நம்பி உள்ளனர்.

இந்த ரயில் நிலையங்களில் பயணிகள் செல்வதற்காக சுரங்கபாதைகள் உள்ளன. பலத்த மழையால் இந்த சுரங்க பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இந்த வெள்ளநீரில் பயணிகள் நடந்து சென்றனர். ரயில் நிலையங்களில் உள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மேற்கூரைகளில் இருந்து அருவி போல தண்ணீர் கொட்டியது. 

இதனால் ரயில் நிலைய சுரங்கபாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் பல மணி நேரம் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள். விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள்.

நியூயார்க் நகர சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. 

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினார்கள்.பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp