பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையில் புதிய வரலாறு.. சேப்பாக்கத்தில் அசத்திய ஆப்கானிஸ்தான்
ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதித்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை தொடரில் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜர்தான் கூட்டணி களமிறங்கியது. தொடக்கம் முதலே குர்பாஸ் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அதேபோல் இருவருமே சிங்கிள் ஓடுவதில் கில்லியாக செயல்பட்டனர்.
சிறப்பாக ஆடிய குர்பாஸ் 38 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல் ஜத்ரானும் அரைசதம் கடக்க, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி பவுலர்கள் விக்கெட்டுக்காக தீவிரமாக போராடினர்.
முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஜத்ரான் - ரஹ்மத் ஷா இருவரும் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர்.
அரைசதம் கடந்த பின் ஜத்ரான் பவுண்டரிகள் விளாசுவதை அதிகப்படுத்தினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் சேர்த்திருந்தது.
இதையடுத்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜத்ரான் ஹசன் அலி பந்தில் 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் பாகிஸ்தான் அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக ஆடிய அவர் 58 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற கடைசி 6 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் அணி ஷாகின் அப்ரிடியை அட்டாக்கில் கொண்டு வந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா - ஷாகிதி இருவரும் எந்த அழுத்தமும் இல்லாமல் ரன்களை சேர்த்தனர்.
இதன் காரணமாக 49வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி ஆஃப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதித்துள்ளது. கடைசி வரை களத்தில் இருந்த ரஹ்மத் ஷா 77 ரன்களும், ஷாகிதி 48 ரன்களும் சேர்த்தனர்.