பாபர் அசாம் செய்த மாற்றம்.. கடைசி 10 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த பாகிஸ்தான்
உலகக்கோப்பை தொடரின் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்கினர். இதனால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தரப்பில் அப்துல்லா சஃபீக் - இமாம் உல் ஹக் கூட்டணி களமிறங்கியது. சில ஓவர்கள் நிதானம் காட்டிய நிலையில், 5வது ஓவரில் அப்துல்லா சஃபீக் அபாரமாக சிக்சர் ஒன்றை விளாசி அசத்தினார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1,168 பந்துகளுக்கு பின் பவர் பிளே ஓவர்களில் சிக்சரை விளாசியது. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இமாம் உல் ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து பாபர் அசாம் - அப்துல்லா சஃபீக் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, சரியான நேரத்தில் பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய அப்துல்லா சஃபீக் 60 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
இதன்பின் நூர் அஹ்மத் வீசிய பந்தில் அப்துல்லா சஃபீக் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த முகமது ரிஸ்வான் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த சக்கீல் சிறிது நேரம் தாக்கு பிடித்து 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உடனடியாக இஃப்திகார் அஹ்மத்துக்கு பதிலாக ஷதாப் கானை களமிறக்கினார்.
இதன்பின் பாபர் அசாம் அட்டாக்கில் களமிறங்கி அரைசதம் கடக்க, பாகிஸ்தான அணியின் ஸ்கோர் வேகமாக முன்னேறியது. 40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் அதிரடிக்கு திரும்பிய பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் சரியான நேரத்தில் இஃப்திகார் அஹ்மத் களமிறங்க, பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. 46வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 47வது ஓவரில் 16 ரன்களில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 48வது ஓவரில் 13 ரன்களும், 49வது ஓவரில் 16 ரன்களும் குவிக்கப்பட்டன.
கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.