பாகிஸ்தான் முதல் வெற்றி.. கடைசிவரை போராடிய நெதர்லாந்து
india, cwc23, icc odi world cup 2023 ,icc mens cricket world cup 2023, world cup cricket 2023 ,cricket, இந்தியா ,ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ,ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, கிரிக்கெட்
பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 287 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது. அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறினாலும், பவுலிங்கில் புலி என்பதை நிரூபித்துள்ளது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவருமே சிறப்பாக பந்து வீசினர். அனைவரும் விக்கெட் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அது தவறான முடிவு என சில விமர்சகர்கள் கூறினர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை 38 ரன்களுக்குள் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் பாபர் அசாம் 18 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அடுத்து வந்த முகமது ரிஸ்வான், சவுது ஷகீல் நிலைத்து நின்று ஆடி இருவரும் அரைசதம் கடந்தனர்.
ஷகீல் 52 பந்துகளில் 68 ரன்களும், ரிஸ்வான் 75 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர். அவர்களுக்கு பின் நவாஸ் 39, ஷதாப் கான் 32 ரன்கள் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து ஆடிய நெதர்லாந்து அணியில் துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 52, ஆல் - ரவுண்டர் பஸ் டி லீடே 67 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் வீழ்ந்த நிலையிலும் ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் வான் பீக் 28 ரன்கள் சேர்த்து போராட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அவருக்கு ஈடு கொடுத்து ஆட வீரர்கள் இல்லாத நிலையில் நெதர்லாந்து அணி 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பேட்டிங்கில் விட்டத்தை பவுலிங்கில் பிடித்தது பாகிஸ்தான் அணி.
அந்த அணியின் ஷஹீன் அப்ரிடி 1, ஹசன் அலி 2, ஹாரிஸ் ரௌப் 3, இப்திகார் அஹ்மத் 1, முகமது நவாஸ் 1, ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் அணியின் ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தி அசத்தினர். அதே போல எந்த பந்துவீச்சாளரும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுக்கவில்லை.