பாகிஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் ஃபகர் ஜமான் படைத்துள்ளார்.
இத்தனை நாளா எங்கயா இருந்த.. பற்ற வைத்து பறக்கவிட்ட ஃபகர் ஜமான்.. 63 பந்துகளில் சதம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தரப்பில் ஃபகர் ஜமான் - அப்துல்லா சஃபிக் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் அப்துல்லா சஃபிக் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜமான் - பாபர் அசாம் கூட்டணி இணைந்தது.
இதையடுத்து 4 ஓவர்கள் வரை அமைதி காத்த ஜமான், போல்ட் வீசிய 5வது ஓவரில் 17 ரன்களை விளாசினார். அங்கு தொடங்கிய அதிரடியை நியூசிலாந்து அணியின் எந்த பவுலராலும் நிறுத்த முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களை சேர்த்தது.
இதன்பின் திடீரென அட்டாக்கில் கொண்டு வரப்பட்ட கிளென் பிலிப்ஸ், அதிரடியாக ஆடிய ஜமானுக்கு பந்துவீசி மெய்டன் செய்தார். ஆனால் மீண்டும் கிளென் பிலிப்ஸ் அட்டாக்கில் வந்த போது அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி தள்ளினார்.
இதனால் 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பின் போல்ட், சவுதி, சான்ட்னர் என்று நட்சத்திர பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து அட்டாக்கில் வந்தும், ஃபகர் ஜமானை கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறப்பாக ஆடிய ஃபகர் ஜமான் 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக குறைந்த பந்துகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இவரின் அதிரடி காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 152 ரன்களை எட்டியது.
உலகக்கோப்பை தொடரின் முதல் 6 போட்டிகளில் ஃபகர் ஜமான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாத நிலையில், கடந்த போட்டியில் களமிறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது இந்த போட்டியில் சதம் விளாசியிருப்பதால், பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.