மூத்த வீரரருக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... பிசிசிஐ எடுத்த அதிரடி தீர்மானம்!
தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி மீண்டும் டி20 அணியில் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இந்திய டி20 அணியில், ஒரு சில சர்வதேச டி20 போட்டிகளே ஆடியுள்ள இளம் வீரர் ரிங்கு சிங் தன் இடத்தை உறுதி செய்து இருப்பதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன நடந்தாலும், டி20 உலகக்கோப்பை தொடரில் ரிங்கு சிங் இடம் பெறுவது உறுதி என கூறப்படுகிறது.
கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதியுடன் தோற்று வெளியேறிய பின் ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தனர்.
இதனையடுத்து, பல இளம் வீரர்கள் அணியில் வாய்ப்பு பெற்றனர். ஆனால், தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி மீண்டும் டி20 அணியில் விளையாட விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
அதனால், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவர்களை சேர்த்தால் எந்தெந்த இளம் வீரர்களை அணியில் வைத்திருப்பது, யாரை நீக்குவது? என்ற விவாதம் பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தேர்வுக் குழு இடையே ஏற்பட்டு உள்ளது.
இந்த விவாதத்தின் போது, எக்காரணம் கொண்டும் ரிங்கு சிங்குவை அணியில் இருந்து நீக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு ஃபினிஷர் பணியை செய்யும் இடது கை பேட்ஸ்மேன் கிடைப்பது அரிது என்பதால் அவரை அணியில் தொடரச் செய்ய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஹர்திக் பாண்டியா மீண்டு வருகிறார். அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் முழு உடற்தகுதி பெற்று விடுவார் என கூறப்படுகிறது.
அதே சமயம், அவரால் முழுவீச்சில் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடந்தால் அவரை வெறும் பேட்ஸ்மேனாக பயன்படுத்த நினைத்தாலும், ரிங்கு சிங் இருப்பதால் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைக்காது.
ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா இருவருமே ஃபினிஷர்கள் தான். இருவரும் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் தான் பேட்டிங் செய்வார்கள். அதனால், ரிங்கு சிங் - பாண்டியா இருவரில் ஒருவரை மட்டுமே அணியில் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
பாண்டியா அணியில் இடம் பெற வேண்டும் என்றால் இனி வேகப் பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தோடு தான் இடம் பெற வேண்டும். அப்படி அவர் இடம் பெற்றால் பாண்டியா ஆறாவது வரிசையிலும், ஜிதேஷ் சர்மா ஏழாவது வரிசையிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.