ஒருநாள் அறிமுக போட்டியிலேயே சாதனை.. இன்ப அதிர்ச்சி கொடுத்து ரிங்கு சிங் புது அவதாரம்!
உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் ரிங்கு சிங் வியக்க வைத்து இருக்கிறார்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய சாய் சுதர்ஷன் 62, கே எல் ராகுல் 56 ரன்கள் எடுத்து கடினமான பிட்ச்சில் பொறுப்பாக பேட்டிங் செய்தனர். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சஞ்சு சாம்சன் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த 33 வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வந்த ரிங்கு சிங் ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து நம்பிக்கை அளித்தாலும் 14 பந்துகளில் 17 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் அர்ஷ்தீப் சிங் 18 ரன்கள் அடித்து கை கொடுக்க இந்திய அணி 211 ரன்கள் எடுத்தது. கடினமான பிட்ச் என்பதால் பவுலிங்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால், முதல் 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்க துவக்க வீரர்கள் ரீஸா ஹென்ரிக்ஸ், டோனி அபார ஆட்டம் ஆடினர். ஹென்ரிக்ஸ் பந்துகளை டெஸ்ட் போட்டி போல நிதானமாக கையாண்டார். மறுபுறம் டோனி ரன் குவித்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் ஹென்ரிக்ஸ் - டோனி கூட்டணி 130 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஹென்ரிக்ஸ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டுசென் - டோனி ஜோடி சேர்ந்தது.
இந்திய அணி அர்ஷ்தீப் சிங்கை தவிர்த்து முகேஷ் குமார், ஆவேஷ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், திலக் வர்மா என ஐந்து பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் கிடைக்கவில்லை.
அது மட்டும் நடந்து இருந்தா.... தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்... கேப்டன் கேஎல்.ராகுல் விளக்கம்!
தோல்வி உறுதி என்ற நிலையில் ரிங்கு சிங்கை அழைத்து பந்து வீச கேப்டன் கே எல் ராகுல் சொன்னார். உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.
டுசென் 36 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங்கை வெறும் பேட்ஸ்மேன் என நினைத்துக் கொண்டு இருந்த அனைவருக்கும் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் தென்னாப்பிரிக்கா அணி 42.3 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு ஓவர் மட்டும் வீசிய ரிங்கு சிங் 2 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.