ரோஹித் ஓய்வு எப்போது?... நிச்சயம் இந்த சமயத்தில் ஓய்வு அறிவிப்பார்: வெளியான தகவல்!
ரோஹித் சர்மா, டெஸ்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, சமீப காலமாகவே டெஸ்டில், பார்ம் அவுட்டில் உள்ளதுடன், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில், மொத்தமே 42 ரன் எடுத்தார்.
தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 91 ரன்களைதான் எடுத்தார். இறுதியில், இந்திய அணி, 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3,6, 10 போன்ற சொற்ப ரன்களைதான், ரோஹித் சர்மாவால் எடுக்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில், ரோஹித் சர்மா இல்லாதபோது கே.எல்.ராகுல் ஓபனராக விளையாடி, மேட்ச் வின்னராக இருந்தார்.
இதனால், இரண்டாவது போட்டியின்போது இந்திய அணியில் இணைந்த ரோஹித் சர்மா, வேறு வழியில்லாமல் மிடில் வரிசைக்கு சென்றார். மிடில் வரிசையில், ரோஹித்தால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
இந்நிலையில், டாப் ஆர்டரில் பார்மில் இருக்கும் ஒரேயொரு பேட்டரான கே.எல்.ராகுலை, நான்காவது டெஸ்டில், ஓபனர் இடத்தில் இருந்து நீக்கி, ஒன்டவுன் இடத்திற்கு ரோஹித் மாற்றியுள்ளார். ரோஹித் மீண்டும் ஓபனராக களமிறங்க உள்ளார்.
ரோஹித் சர்மா சமீப காலமாக பார்ம் அவுட்டில் இருக்கும் நிலையில், பார்மில் இருக்கும் ராகுலின் இடத்தை மாற்றியுள்ளதால், நான்காவது டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ஒருவேளை, ரோஹித் சர்மா சொதப்பி, இந்தியா தோற்றால் ரோஹித் தான் தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்கும் நிலை இருக்கும். இதனால், ரோஹித் சர்மா ஓய்வுபெற வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்க ஆரம்பிக்கும்.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள, இங்கிலாந்து அணிக்காக 50 டெஸ்ட்களில் விளையாடிய மாண்டி பனேசர், ரோஹித் எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில், ‘‘ரோஹித் சர்மாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி நான்கு டெஸ்ட் இன்னிங்ஸ்கள் தான், மிகமுக்கியமானது. கடைசி இரண்டு டெஸ்ட்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருவேளை, கடைசி இரண்டு டெஸ்டில், ஒரு சதத்தை கூட எடுக்கவில்லை என்றால், 5ஆவது டெஸ்ட் முடிந்த உடனே, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பது தான் சிறந்தது.
ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால், நிச்சயம் இந்திய அணி அடுத்து ரோஹித்தை, டெஸ்டில் சேர்க்காது. இது ரோஹித்திற்கும் தெரியும். சிறப்பாக விளையாடவில்லை என்றால், 5ஆவது டெஸ்ட் முடிந்த உடனே ரோஹித் தானாக ஓய்வு அறிவித்துவிடுவார்’’ எனக் கூறினார்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறவில்லை என்றால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு, அடுத்த டெஸ்ட் தொடர், ஜூனில் தான் இருக்கும். இந்திய அணி, இங்கிலாந்து சென்று, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.