பாதி தொடரில் ரோஹித் விலக முடிவு? ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? ரசிகர்கள் தவிப்பு!
இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
நேற்றைய தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அணியில் துணை கேப்டன் பும்ரா பங்கேற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று தனது இன்னிங்ஸ் முடிந்தவுடன் ஓய்வறைக்கு செல்லும் முன் தனது கிளவுஸை புல் தரையில் அவிழ்த்து வைத்து விட்டு சென்ற காட்சி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, இந்த போட்டியுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க போகிறாரா? என்று ரசிகர்கள் குழம்பிபோய் உள்ளனர்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருவதுடன், இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.
அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டதுடன், இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். பும்ராவின் தனிப்பட்ட செயல்பாடு மட்டுமின்றி, அவரது கேப்டன்சியும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில்தான் அவர் ஆட்டம் இழந்து ஓய்வறையை நோக்கி சென்ற போது இடையே தனது கிளவுஸை புல் தரையில் அவிழ்த்து வைத்து விட்டுச் சென்றிருக்கின்றார்.
இனி பேட்டிங் செய்ய மாட்டேன் என்பதை குறிக்கும் வகையில் ரோஹித் சர்மா இவ்வாறு செய்து இருக்கிறாரா அல்லது ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்று பலரும் சுட்டிக்காட்டி வருவதுடன், ஒருவேளை ரோஹித் சர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தால் கடைசி இரண்டு போட்டிகளில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.
2014ஆம் ஆண்டு தோனி இதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் இடையே தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வையும் அறிவித்திருந்தார்.