அது பிரச்சினை இல்ல... இது மட்டுமே தோல்விக்கு காரணம்... ரோஹித் சர்மா வெளிப்படை!
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
இலங்கை மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அத்துடன், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் டாஸை இழந்த இந்தியா, முதலில் பந்துவீசியது. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், இலங்கை வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர்.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், முதல் மூன்று பேட்டர்களும் சிறப்பாக செயல்பட்டனர். பதும் நிஷங்கா 45 (65) ரன்களை அடித்த நிலையில், அவிக்ஷா பெர்ணாண்டோ 96 (102) சதத்தை மிஸ் செய்தார்.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
கேப்டன் அசலங்கா 10 (12), சமரவிக்ரமா 0 (1) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 23 (19) ரன்களை எடுத்தார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 248/7 ரன்களை எடுக்க முடிந்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 35 (20), வாஷிங்டன் சுந்தர் 30 (25) ஆகியோர் மட்டுமே 30+ ரன்களை அடித்தனர். ஷுப்மன் கில் 6 (14), விராட் கோலி 20 (18), ரிஷப் பந்த் 6 (9), ஷ்ரேயஸ் ஐயர் 8 (7) போன்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ஆல்-ரவண்டர்கள் அக்சர் படேல் 2 (9), ரியான் பராக் 15 (13) போன்றவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர்களும் படுமோசமாக சொதப்பியதால், இந்திய அணி 26.1 ஓவர்கள் முடிவில் 138/10 ரன்களை மட்டும் சேர்த்து, 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்திய அணி கடைசியாக 1997ஆம் ஆண்டில்தான், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அதன்பிறகு, தற்போதுதான் இழந்திருக்கிறது. அப்போதும், ஸ்பின்னர்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தற்போதும், இலங்கை ஸ்பின்னர்கள்தான் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய ரோஹித் சர்மா, ‘‘சுழல்தான் இந்திய அணிக்கு காரணம் என நான் கூற மாட்டேன். இலங்கை அணியினர் எங்களைவிட சிறப்பாக விளையாடினார்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
தொடரை இழந்ததால், இந்திய அணி பலம் இழந்துவிட்டதாக கருத முடியாது. தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஒவ்வொரு வீரரிடமும் ஆலோசிப்போம். நிச்சயம் அதிரடி கம்பேக்கை கொடுப்போம்’’ எனக் கூறினார்.