30 ஆண்டுகளுக்கு முந்தைய சிறைக்கைதி மரண வழக்கில் குஜராத் முன்னாள் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சீவ் பட்டிற்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அப்போது குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் துணை எஸ்.பி.யாக சஞ்சீவ் பொறுப்பில் இருந்தபோது, ஜாம் ஜோத்பூர் நகரில் கலவரம் வெடித்தது.

இதுதொடர்பாக சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவரான பிரபுதாஸ் வைஷானி விடுதலைக்கு பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கு சிறையில் அவர் இருந்தபோது சஞ்சீவ் பட் மற்றும் பொலிஸார் நடத்திய தாக்குதலே காரணம் என்று, பிரபுதாசின் சகோதரர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோன்று வழக்கில் தொடர்புடைய மற்ற 6 போலீசாருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.