எந்த அதிசயமும் வந்து அணியை காப்பாற்றாது... பாபர் அசாமை விளாசிய ஷாஹித் அப்ரிடி.. என்ன சொன்னார்?
ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான தோல்விகளால் துவண்டு இருக்கும் நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மீது ஒட்டுமொத்த விமர்சனமும் குவிந்துள்ளது.
முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாபர் அசாம் கேப்டனாக அணிக்கு முன் உதாரணமாக செயல்பட வேண்டும். ஓடி ஒளிந்து கொள்ள முயற்சி செய்தால் எந்த அதிசயமும் வந்து அணியை காப்பாற்றாது என கடுமையாக சாடி இருக்கிறார்.
"நீங்கள் போட்டியின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் இது போன்று தான் நடக்கும். எங்கேயோ போய் ஒளிந்து கொள்ள முயற்சி செய்தால், நேர்மறையாக சிந்திக்கவில்லை என்றால் ஏதாவது அதிசயம் நடக்கும் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், அப்படி எந்த அதிசயமும் நடக்காது. அதெல்லாம் எப்படி போராட வேண்டும் என தெரிந்த தைரியமானவர்களுக்கு தான் நடக்கும்." என பாபர் அசாம் குறித்து கடுமையாக பேசினார் ஷாஹித் அப்ரிடி.
"ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஏனெனில், அவர்கள் தங்கள் கேப்டன் எல்லாவற்றையும் கொடுக்கிறார். ஆனால், நாம் அப்படி இல்லையே என அவமானப்படுவார்கள். கேப்டன் அப்படி இருக்கும் போது, நாம் ஏன் அப்படி இருக்கக் கூடாது என நினைப்பார்கள்" என்றார் அப்ரிடி.
மேலும், "இதற்கு முன்பும் இதெல்லாம் நடந்துள்ளது. நானும், முகமது யூசுப்பும் கேப்டனாக இருக்கும் போது நாங்கள் ஓடிச் சென்று வீரர்களுக்கு உதவும் போது மொத்த அணியும் சுறுசுறுப்பாக மாறும்.
களத்தில் இன்சமாம் டைவ் அடிக்கும் போது, நம் கேப்டனே டைவ் அடிக்கும் போது நாம் ஏன் டைவ் அடிக்கவில்லை என நினைப்பார்கள். எனவே, எல்லாமே கேப்டனிடம் தான் உள்ளது." என்றார் ஷாஹித் அப்ரிடி.
"உங்கள் தேசிய அணிக்கு கேப்டனாக இருப்பது பெரிய மரியாதை. அது பூக்கள் தூவிய படுக்கை அல்ல. நீங்கள் நன்றாக செயல்பட்டால் பாராட்டுவார்கள். நீங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உங்களை விமர்சனம் செய்வார்கள். இது தலைமை பயிற்சியாளருக்கும் பொருந்தும்" என்றார் ஷாஹித் அப்ரிடி.