கம்பீர் செயலால் இந்திய அணியில் ஏற்பட்ட விரிசல்... அப்படி என்ன நடந்தது?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் முதல் போட்டியில் கூட இந்திய அணி விளையாடாத நிலையில் இது போன்ற தகவல் வெளியாகி உள்ளது.
கம்பீர் தன்னை ஓரங்கட்டுவதாகவும், பிளேயிங் லெவனில் தனக்கு இடம் அளிக்காமல் இருப்பதாகவும், வெளியே இருக்கும் ஒரு விஷயத்தை வைத்து தன்னை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதாகவும் அந்த விக்கெட் கீப்பர் கருதுகிறார் என கூறப்படுகின்றது.
இந்த தகவலை டைம்ஸ் நவ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளதுடன், அந்த விக்கெட் கீப்பர் யார் என தெரிவிக்கவில்லை.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ரிஷப் பண்டுக்கு ஒரு நாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு செல்லும் முன் கவுதம் கம்பீரிடம் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளதா? என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கம்பீர், "இப்போதைக்கு இந்திய ஒருநாள் அணியில் கே.எல். ராகுல் தான் முதன்மை விக்கெட் கீப்பர். ரிஷப் பண்டுக்கு இப்போதைக்கு அணியில் இடம் கிடைக்காது" என குறிப்பிட்டார்.
ரிஷப் பண்ட் சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடரில் இக்கட்டான நேரத்தில் கை கொடுப்பார் என்ற நிலையில், இந்த விரிசலுக்கு இதுதான் காரணமா என்று தெரியவில்லை.