ஐபிஎல் தொடரின் விலை என்ன.. பங்குகளை வாங்க சவுதி அரேபியா இளவரசர் விருப்பம்!
ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்தது.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கியது. 8 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது.
ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், தொடருக்கான விளம்பர வருவாய், ஒளிபரப்பு வருவாய் உள்ளிட்டவை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வளர்ந்தது.
அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிக பணம் ஈட்டக் கூடிய இரண்டாவது விளையாட்டாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அமைந்தது. அதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை ரூ.48 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் வளர்ச்சி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. அமேசான் நிறுவனம் கூட ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வாங்க ஆலோசித்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் மதிப்பு 10.9 பில்லியன் அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் ஐபிஎல் தொடரின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரபல நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் தரப்பில் ஐபிஎல் தொடரை பில்லியன் டாலர்கள் கொண்ட ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செப்டம்பர் மாதம் இந்தியா வந்த சவுதி இளவரசர் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் விளையாட்டு பல்வேறு நாடுகளுக்கு டி20 ஃபார்மட் மூலமாக விரிவாக்கமாக உள்ளது. இதனால் கிரிக்கெட்டில் உச்சக்கட்ட வருவாய் ஈட்டக்கூடிய தொடரின் பங்குகளை வாங்க சவுதி அரேபியா முன் வந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எந்த முடிவும் எடுக்கப்படாது என்று கூறப்படுகிறது.
பிசிசிஐ தரப்பிலும் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேபோல் சவுதி அரேபியா தரப்பில் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதை ஐபிஎல் உரிமையாளர்களில் ஒருவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.