ரோஹித் செய்தது தவறு....மொத்த அணியும் ஃபார்ம் அவுட்... சரமாரியாக விளாசிய கவாஸ்கர்
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடிய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ரஞ்சி தொடரில் பங்கேற்று தன் பேட்டிங்கை திறம்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதவுள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதி என்பதால் இந்தியா அதிக வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில், விராட் கோலி, கே எல் ராகுல் தவிர ஏனைய வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகி உள்ளதாக சரமாரியாக விளாசி இருக்கிறார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் விளையாடி, அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பயிற்சி செய்யாமல், டி20 தொடரில் விளையாடி இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியமா? அல்லது ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முக்கியமா? என ரோஹித் சர்மாவை அவர் விளாசி தள்ளியுள்ளார்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ராகுல் சதம் அடித்ததுடன், விராட் கோலி அரைசதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
அவர்களைத் தவிர ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் என அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் நான்கு இன்னிங்க்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடிய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ரஞ்சி தொடரில் பங்கேற்று தன் பேட்டிங்கை திறம்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா அல்லது மாற்று வீரராக இருப்பாரா? என்ற சந்தேகம் உள்ள போதும், அவர் பேட்டிங் பயிற்சிக்காக ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார்.
இந்த நிலையில், ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய மூவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பினால் இந்த விவகாரம் பெரிதாக மாறும் என்பதுடன், தங்களுக்கு பழக்கமான இந்திய ஆடுகளங்களில் இவர்கள் மூவரும் எளிதாக ரன் குவிக்கவும் வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் தான் அவர்களை டி20 தொடரில் பிசிசிஐ ஆட வைத்து இருப்பதாக கூறப்படுகின்றது.