மைதானத்திலேயே சாய்ந்த கில்.. திடீரென வெளியேறியது ஏன்? நடந்தது என்ன?
உலகக்கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் திடீரென ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறை நோக்கி நடந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் முதலே அதிரடியாக ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா போல்ட் பந்தில் பவுண்டரிகளை விளாச, இன்னொரு பக்கம் சுப்மன் கில் டிம் சவுதி பந்தில் பவுண்டரிகளை விளாசி ரன் கணக்கை தொடங்கினார்.
இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 6 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்தது. விராட் கோலி ஆடுகளத்தையும் எதிரணியின் திட்டத்தையும் அறிய சில ஓவர்கள் எடுத்து கொண்ட நிலையில், சுப்மன் கில் அதிரடியில் பொளந்து கட்டினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 13வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் 13வது அரைசதமாகும்.
அதன்பின் சுப்மன் கில், நியூசிலாந்து அணியின் சான்ட்னரை வெளுத்து கட்டினார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. இந்த நிலையில் 22வது ஓவரின் போது சுப்மன் கில் திடீரென கால்களை பிடித்தவாறு மைதானத்திலேயே சாய்ந்தார்.
இதன்பின் இந்திய அணியின் பிசியோ உடனடியாக ஓடி வர, அவரின் கால்களில் பிடிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதற்கு மேல் விளையாட முடியாது என்று சுப்மன் கில் திட்டவட்டமாக கூறியதால், வேறு வழியின்றி ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் சுப்மன் கில் ஓய்வறைக்கு நடந்தார்.
65 பந்துகளை எதிர்கொண்டு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில் வெளியேறியுள்ளார். ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறாமல் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறை சென்றுள்ளதால், எந்த சூழலிலும் சுப்மன் கில் களமிறங்கலாம்.