அயோத்தி சமரச குழுவில் 3 பேருமே தமிழர்கள்

அயோத்தி சமரச குழுவில் 3 பேருமே தமிழர்கள்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு? என்பது தொடர்பாக சர்ச்சை நிலவுகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றில் நடந்து வருகிறது.

அந்த நிலத்தை சுமுகமாக பிரித்து கொள்வதில் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த 3 பேர் கொண்ட சமரச குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இந்த குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், மூத்த சட்டத்தரணி ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 3 பேருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்ராகிம் கலிபுல்லா

சமரச குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இப்ராகிம் கலிபுல்லா, சிவங்கங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர். 1951-ம் ஆண்டு ஜூலை 23-ந் திகதி பிறந்த இவருடைய இயற்பெயர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா. இவர் 1975-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து சட்டத்தரணியாக பதிவு செய்தார். நீண்டகாலமாக சட்டத்தரணியாக பணியாற்றி அனுபவம் வாய்ந்த இவர் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு உள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கலிபுல்லா நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு பிப்ரவரியில் காஷ்மீர் மாநில பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற இவர் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தலைமை நீதிபதி ஆனார். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற கலிபுல்லா, 2016-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். அதை தொடர்ந்து பல்வேறு சட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீரவிசங்கர்

சமரச குழுவில் இடம்பெற்றுள்ள ஆன்மிக குரு ஸ்ரீரவிசங்கர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர். 1956-ம் ஆண்டு பிறந்தார். 1981-ம் ஆண்டு வாழும் கலை அமைப்பை நிறுவினார். அதை தொடர்ந்து 1987-ம் ஆண்டு ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு சர்வதேச மனித மதிப்புக்கான அமைப்பை தொடங்கினார்.

நீண்டகாலமாகவே அயோத்தி வழக்கில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வக்பு வாரியங்கள் மற்றும் ராமஜென்ம பூமி அமைப்பினருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய ஆலோசனைகள் பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சமரச குழுவில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளதால் இந்த பிரச்சினையை தீர்க்க மேலும் முனைப்போடு அவர் செயல்பட வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீராம் பஞ்சு

மூத்த சட்டத்தரணியான ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்தவர். மும்பை சட்டக்கல்லூரியில் பயின்ற இவர் 1976-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றில் வக்கீலாக தன் பணியை தொடங்கினார். 2005-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றில் முதன் முதலாக சமரச மையத்தை தொடங்கினார்.

பல வழக்குகளில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவிடும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட அனுபவம் கொண்டவர். மூத்த சட்டத்தரணியான அவர் சட்ட நுணுக்கங்களுடன் சமரச பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமை படைத்தவர். சமரச மையம் நடத்தி வரும் இவர் அது தொடர்பாக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

இந்திய சமரச பேச்சாளர்கள் கழகத்தின் தலைவராகவும், சர்வதேச சமரச பேச்சாளர்கள் கழக நிர்வாக குழு இயக்குனராகவும் இவர் உள்ளார். சிங்கப்பூர் சர்வதேச சமரச மையம் இவரை தங்கள் குழுவில் ஒருவராக நியமித்து உள்ளது.

அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே உள்ள நிலப்பரப்பை பங்கிட்டு கொள்வதில் நீண்ட காலமாக இருந்த சட்டப்பிரச்சினையை தீர்க்க இவரை தான் உச்ச நீதிமன்றம் நியமித்தது. மேலும் மும்பையில் பார்சி சமூகத்தினரின் பொது பிரச்சினையை தீர்க்க இவருடைய உதவியை உச்ச நீதிமன்றம் நாடியது.

Related posts