பொலிஸார் பாதுகாப்பு

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாளை (வியாழக் கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்காக உரையாற்ற இருக்கிறார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒரு இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னையில் 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதாவது, காஷ்மீர் விவகாரத்தின் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

சுதந்திர தினத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால், முக்கிய இடங்களில் தேவையான அளவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நகரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.