பொங்கல் வைக்க ஆண்கள் மட்டுமே அனுமதி: நூற்றாண்டுகளாக தொடரும் வழக்கம்!
திருச்சி மாவட்டம், கோம்பை பகுதியில் நடத்தும் வித்தியாசமான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், கோம்பை பகுதியில் நடத்தும் வித்தியாசமான பொங்கல் விழா கொண்டாட்டங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அங்கு உள்ள 33 கிராமங்களில் மலைவாழ் மக்களே அதிகமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் மாலையில்தான் பொங்கல் வைக்கிறார்கள்.
இங்குள்ள பச்சைமலையில் கடுமையான பனிப்பொழிவு காலை 10 மணி வரை நிலவும். அதனாலேயே பொங்கல் பண்டிகையினை மாலையில் வைத்து வழிபடுகிறார்கள்.
இந்த பழக்கம் பல நூறு காலமாகவே இவர்களிடம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, இவர்களில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைப்பார்களாம். பெண்கள் பொங்கல் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
பச்சைமலையில் விளைவித்த அரிசி உள்ளிட்டவைகளை பயன்படுத்தியே பொங்கலை செய்கிறார்கள். அரிய நெல் வகைகளான புழுதிகார நெல், மர நெல், தூண்கார நெல் ஆகிய நெல் வகைகளை மட்டுமே இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காக இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கிறார்களாம். சிறிதுகூட ரசாயன உரம் கலப்பில்லாமல் அரிசியை பெறுகிறார்கள். இந்த அரிசியில்தான் பொங்கல் வைக்கப்படுகிறது.
புதுமண தம்பதிகளுக்கும், உறவினர்களுக்கும் பச்சை மலையில் விளையக்கூடிய புழுதிகாரநெல், மரநெல், தூண்கார நெல் வகைகளில் தூண்கார நெல்களை, பொங்கல் சீர்வரிசையாக கொடுத்து அனுப்புகிறார்கள்.
மாலையில் ஆண்கள் அனைவரும் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதுமே, அன்று இரவு ஏராளமான நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்துவார்களாம். பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வரும், இந்த பச்சை மலையில் வைக்கப்பட்ட பொங்கல்தான், இணையத்தில் வைரலாகி வருகிறது.