ஒரே ஓவரில் 31 ரன்கள்.. 24 பந்துகளில் அரைசதம்.. அரையிறுதியில் மிரட்டிய 13 வயது சிறுவன்!
ஏசிசி தரப்பில் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அணி வீழ்த்தியது.
ஏசிசி யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று சாதனையை படைத்திருக்கிறது.
ஏசிசி தரப்பில் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அணி வீழ்த்தியது.
தொடர்ந்து 2வது அரையிறுதியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இதன்பின் டாஸ் வென்று இலங்கை அணியின் கேப்டன் மதுலன் தெவ்மிகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்கத்திலேயே இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில், இலங்கை அனி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஷருஜன் - அபய்சிங்கே கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின்னர் ஷருகன் சண்முகநாதன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, லக்வின் அபய்சிங்கே 69 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 46.2 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஆயுஷ் மாத்ரே மற்றும் கிரண் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசப்பட்டது.
தொடர்ந்து 2வது ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 6, 6, 4, 4, 6 என்று மொத்தமாக 6 பந்துகளில் ஒய்டு உட்பட 31 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இரு வீரர்களும் பவுண்டரிகளிலேயே டீல் செய்தனர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவர்களில் 91 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுபக்கம் 13 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 24 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். சிறப்பாக ஆடிய அவர், 36 பந்துகளில் 5 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. நாளை மறுநாள் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதவுள்ளன.