சாம்பியன்ஸ் கோப்பையை வென்றவுடன் காலில் விழுந்த விராட் கோலி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை.
இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முகமது ஷமியே தலைமை தாங்கினார். முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு வந்து கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தான் இந்திய அணிக்கு திரும்பினார்.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஷமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ஷமி மூன்று விக்கெட்டுகளையும் தற்போது இறுதிப் போட்டியில் அதிகம் ரன் விட்டுக் கொடுத்தாலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.
இதன் மூலம் முகமது ஷமி, நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழலில் ஷமி இந்த தொடரில் பல நெருக்கடிகளை சந்தித்தார்.
முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமி விக்கெட் எடுக்காததால் ஒரு தரப்பினர் சமி மீது விரும்பத்தகாத குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். இதனால் ஷமி மனவேதனை அடைந்தார்.
இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தின் போது ஷமி ஜூஸ் குடித்ததால் நோன்பு ஏன் அவர் வைக்கவில்லை என்று கூறி இன்னொரு தரப்பினரும் அவரை கடுமையாக சாடியிருந்தனர்.
இப்படி ஷமி பல்வேறு தரப்பினரின் விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறார். எனினும் ஷமி தொடர்ந்து தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
இதற்கு காரணம் இந்திய அணியில் உள்ள ரோகித் சர்மா, விராட் கோலி, பயிற்சியாளர் கம்பீர் போன்றோர் ஷமிக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக தான் பல நெருக்கடியில் இருந்தாலும் வெற்றிகரமாக தொடர்ந்து ஷமி விளையாடி வருகிறார் இந்த தருணத்தில் சாம்பியன்ஸ் டிராபியை இறுதிப்போட்டி பார்ப்பதற்காக சமியின் தாய் துபாய் வந்திருந்தார்.
முதலில் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது குடும்பத்தினர் வீரர்களுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது ஷமியின் தாயைப் பார்த்த விராட் கோலி, திடீரென்று ஷமியின் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இதை அடுத்து விராட் கோலியை வாழ்த்திய ஷமியின் தாய் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.