பத்தாண்டு கனவு... எமோஷனலான ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி!

பாகிஸ்தான் அணியை 282 ரன்களுக்குள் தடுத்ததற்காக நிச்சயம் பவுலர்களை பாராட்ட வேண்டும். 

பத்தாண்டு கனவு... எமோஷனலான ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி!

சர்வதேச கிரிக்கெட்டில் உலகக்கோப்பை தொடரின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி முதல்முறையாக வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் அனுபவ வீரர் முகமது நபி பேசுகையில், ஆஃப்கானிஸ்தான் நாட்டிற்கு இது மிகப்பெரிய தருணம். இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கிறோம். 

பாகிஸ்தான அணிக்கு எதிரான ஐசிசி தொடரில் வெல்ல வேண்டும் என்று காத்திருந்தோம். கடந்த 3 மாதங்களாக ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். இங்கிலாந்து அணியை தொடர்ந்து பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களால் டிஃபென்ஸ் மட்டுமல்லாமல் சேஸிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும். எங்களுக்கு அதிகம் பிடித்த வெற்றியாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 7 போட்டிகளில் விளையாடி, கடைசி நேரத்தில் தோல்வியடைந்திருக்கிறோம். ஆனால் இன்று குர்பாஸ் மற்றும் ஜத்ரான் இருவரும் எங்களுக்கு தொடக்கத்திலேயே உத்வேகம் அளித்துவிட்டனர். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்காதது சாதகமாக அமைந்தது.

இந்த ஆடுகளம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆடுகளம் போன்றது என்று நினைத்தோம். ஆனால் இந்த ஆடுகளம் நன்றாக உள்ளது. பாகிஸ்தான் அணியை 282 ரன்களுக்குள் தடுத்ததற்காக நிச்சயம் பவுலர்களை பாராட்ட வேண்டும். 

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் நூர் அஹ்மத்தை களமிறக்க வேண்டும் என்பது தான் எங்கள் திட்டமாக அமைந்தது. 2012 ஆசிய கோப்பை, 2019 உலகக்கோப்பை என்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்தோம்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோல்வியடைந்திருக்க கூடாது. ஆனால் 5 போட்டிகள் முடிவில் 4 புள்ளிகளுடன் இருக்கிறோம். அதனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் வெல்ல முயற்சிப்போம். 

சேப்பாக்கம் மைதானத்தில் எங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதே ஆதரவு புனேவிலும் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp