ஆஸ்திரேலியா அதிரடி... 10ஆவது முறையாக நடந்த சம்பவம்.. மீளுமா இந்திய அணி?
மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் விளாசினர்.
சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக இதற்கு முன்னர் 9 முறை இந்த தொடக்க வீரர்கள் அரைசதம் அடித்துள்ள நிலையில், அவற்றில் ஒன்றில் கூட ஆஸ்திரேலியா அணி தோல்வி அடையவில்லை.
மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்த சாம் கோன்ஸ்டாஸ் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா வீசிய ஒரே ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 18 ரன்களை விளாசினார்.
கோன்ஸ்டாஸின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறிய போது, உஸ்மான் கவாஜாவும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்க்க தொடங்கினார்.
முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் சுழலில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கோன்ஸ்டாஸ் ஆட்டமிழந்தாலும், மறு பக்கம் கவாஜா ரன் குவிப்பை தொடர்ந்து102 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த டெஸ்ட் தொடரில் கவாஜா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். தொடர்ந்து பும்ராவின் வேகத்தில் கவாஜா 121 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா அணியின் இரு தொடக்க வீரர்களும் அரைசதம் அடித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்த போது 9 முறையும் ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்ததில்லை என்பதால், இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவு முடிவுக்கு வந்துவிடும்.