சச்சினை திரும்ப பாக்குற மாதிரி இருக்கு... ஜெய்ஸ்வாலுக்கு ரவி சாஸ்திரி பாராட்டு!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரம் மிக பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜெய்ஸ்வால் 50 பந்துகளுக்கு மேல் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ஜெய்ஸ்வால் 104 ரன்களும், சுப்மன் கில் 65* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் மட்டும் இல்லாமல், நடப்பு தொடர் முழுவதும் பேட்டிங்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வாலை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ரவி சாஸ்திரி, யசஸ்வி ஜெய்ஸ்வாலை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசுகையில், “மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் விளையாட்டு வியப்பை ஏற்படுத்தியது. பேட்டிங்கில் மட்டும் இல்லை, பீல்டிங்கிலும் அவர் அதிக துடிப்புடன் செயல்பட்டார்.
யசஸ்வி ஜெய்ஸ்வாலை களத்தில் பார்க்கும் போது சச்சின் டெண்டுல்கர் என் நினைவுக்கு வருகிறார். யசஸ்வி ஜெய்ஸ்வாலை பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் பகுதி நேர பந்துவீச்சாளராகும் ரோஹித் சர்மாவால் பயன்படுத்தி கொள்ள முடியும்.
களத்தில் எப்போதுமே துடிப்புடன் பிஸியாகவே இருப்பதால் தான் எனக்கு ஜெய்ஸ்வாலை பார்க்கும் போது இளம் வயது சச்சின் டெண்டுல்கர் என் நினைவுக்கு வருகிறார். யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட்டில் பெரிய எதிர்காலம் உள்ளது” என்று தெரிவித்தார்.