அணியில் ஏற்பட்ட விரிசல்.. சச்சின் பக்கம் நின்ற யுவராஜ்.. தோனி கேப்டனான பின்னணி!
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் மிக மோசமான ஆண்டு. அப்போது தான் இந்தியா 2007 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் சிறிய அணிகளிடம் எல்லாம் தோல்வி அடைந்து தொடரில் இருந்தே வெளியேறியது.
அப்போது இந்திய அணியில் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பல குளறுபடிகளை செய்து வைத்து இருந்தார். அவர் பயிற்சியாளர் ஆன பின் சவுரவ் கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினார்.
ராகுல் டிராவிட்டை கேப்டன் ஆக்கினார். அதன் பின் அணியில் விரிசல் ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அது பற்றி யுவராஜ் சிங் விளக்கி இருக்கிறார்.
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
2007இல் கிரேக் சேப்பல் விலகிய பின் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது டிராவிட் கேப்டனாகவும், யுவராஜ் சிங் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
சேப்பல் விலகி இருந்தாலும் அப்போது இந்திய அணியில் அவரால் ஏற்பட்ட விரிசல்கள் நீடித்தன. அதன் பின் டிராவிட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போது அடுத்து வந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு துணை கேப்டனாக இருந்த யுவராஜ் சிங் கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அப்படி இல்லை என்றால் அவருக்கும் சீனியரான சேவாக் கேப்டன் பதவியை பெறலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இது பற்றி பேசிய யுவராஜ் சிங், "அப்போது நான்தான் கேப்டன் ஆகி இருக்க வேண்டும். ஆனால், அப்போது கிரேக் சேப்பல் காரணமாக நடந்த பிரச்சனையில் சேப்பல் அல்லது சச்சின் என இரண்டு பக்கம் இருந்தது. அப்போது நான் மட்டுமே என் சக வீரரான சச்சினை ஆதரித்தேன்." என்றார்.
மேலும், "சில பிசிசிஐ அதிகாரிகள் நான் சச்சின் பக்கம் நின்றதை விரும்பவில்லை. அப்போது யாரை வேண்டுமானாலும் கேப்டன் ஆக்கலாம். ஆனால், என்னை மட்டும் கேப்டன் ஆக்கக் கூடாது என அவர்கள் முடிவு எடுத்ததாக என்னிடம் சொல்லப்பட்டது.
அது உண்மையா என எனக்கு தெரியாது. அதனால் திடீரென என் துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சேவாக் அப்போது அணியில் இல்லை. அதனால், எதிர்பார்க்காத வகையில் தோனி 2007 டி20 உலகக்கோப்பை அணிக்கு கேப்டன் ஆக்கப்பட்டார்." என்றார்.