கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்.. 7 பந்துகளில் 3 விக்கெட்ஸ்.. ஆசிய கோப்பையை கண்முன் காட்டிய சிராஜ்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் வேகத்தில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இலங்கை 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சிராஜ் வேகத்தில் இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இலங்கை 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் விளாசினர். இலங்கை அணி தரப்பில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி 358 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. இலங்கை அணி தரப்பில் நிசாங்கா - கருணரத்னே கூட்டணி களமிறங்கியது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் நிசாங்கா 4 அரைசதங்களை விளாசியுள்ளதால், அவரை பவர் பிளே ஓவர்களிலேயே வீழ்த்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது.
இந்த நிலையில் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே நிசாங்கா டக் அவுட்டாகி வெளியேறினார். அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட, 2வது ஓவரை வீசிய சிராஜ் அழைக்கப்பட்டார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே கருணரத்னே டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து 5வது பந்தில் சமரவிக்ரமா ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து சிராஜ் வீசிய 4வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் குசல் மெண்டிஸ் 1 ரன்னில் போல்டாகி ஆட்டமிழந்தார். இதனால் 3 ரன்களுக்கு இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் ஒரு நிமிடம் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி ரசிகர்களின் கண் முன் வந்து சென்றது. ஆசிய கோப்பையிலும் சிராஜின் வேகத்தில் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.