115 ரன்களை கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து வீரர்!

ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.

115 ரன்களை கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து வீரர்!

உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. 

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேவிட் வார்னர் 93 பந்துகளில் 104 ரன்களையும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 106 ரன்களை விளாசினார். 

இதன் மூலமாக மேக்ஸ்வெல் உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். 
முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் விளாசப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மொத்தமாக 42 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்சர்களும் விளாசப்பட்டது. அதேபோல் நெதர்லாந்து அணி தரப்பில் வான் பீக் 10 ஓவர்களில் 74 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதேபோல் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் பேஸ் டி லீட் தரப்பில் மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற சாதனையை பேஸ் டி லீட் படைத்துள்ளார். 

இவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் மிக் லூவிஸ் 10 ஓவர்களில் 113 ரன்களும், ஆடம் ஜாம்பா 10 ஓவர்களில் 113 ரன்களும் விட்டுக் கொடுத்ததே சாதனையாக இருந்தது. 

ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.

அதேபோல் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை விளாசியது. 

வரலாற்றில் 3 முறை மட்டுமே நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடியுள்ளது. அதில் மூன்றாவது முறை விளையாடிய போது ஒரே போட்டியில் இத்தனை சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp